விவசாயிகள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்
x

விவசாயிகள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்

போடிப்பட்டி

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு ஆவணப்படி நில உரிமைச் சான்று வழங்கக்கோரி மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் நாைள முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்துறை, பத்திரப்பதிவுத்துறை, கூட்டுறவுத்துறை, ஒன்றிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெறுவதற்கு மற்றும் அரசின் கொள்முதல் திட்டங்களில் நெல், கொப்பரை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு என அனைத்திலும் கூட்டு பட்டாவில் உள்ள நிலங்களுக்கு நில உரிமைச் சான்று மேற்கண்ட துறைகளிடம் கட்டாயம் வழங்க வேண்டியதுள்ளது. நிலம் அமைந்துள்ள கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் எழுதிக் கொடுக்கும் நில உரிமைச் சான்றின் மூலம் இது போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் நில உரிமைச்சான்று கொடுக்கக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கூட்டுப்பட்டா வைத்துள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும், நெல் கொள்முதல் திட்டத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாமலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நில உரிமைச்சான்று திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பதற்கான முறையான விளக்கம் கூட இதுவரை கிடைக்கவில்லை.

காத்திருப்பு போராட்டம்

தற்போது அமராவதி ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய பதிவு செய்வதற்காக விவசாயிகள் காத்து கொண்டிருக்கிறார்கள்.நில உரிமைச்சான்று பெற முடியாததால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே தகுதியுள்ள விவசாயிகளுக்கு நில உரிமைச்சான்று வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது எந்த அரசுத்துறைகளும் நில உரிமைச்சான்று கேட்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.பெரும்பாலான நிலங்கள் உட்பிரிவு செய்யப்படாமல் கூட்டு பட்டாவாகவே உள்ள நிலையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதலை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இது தெரிகிறது.இதனைக் கண்டித்து அனைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கோரி நாளை காலை 10 மணி முதல் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story