அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் வீதிஉலா
திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பூத்தேரில் அம்மன் வீதி உலா வந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.
அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.