உடுமலையில் விற்பனையாகும் ஆந்திர மாநில நாவல் பழங்கள்


உடுமலையில் விற்பனையாகும் ஆந்திர மாநில நாவல் பழங்கள்
x

உடுமலையில் விற்பனையாகும் ஆந்திர மாநில நாவல் பழங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலையில் விற்பனையாகும் ஆந்திர மாநில நாவல் பழங்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

புராணக் கதைகள்

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று தமிழ் மூதாட்டி அவ்வைப் பாட்டியை நோக்கி தமிழ்க் கடவுள் முருகன் கேட்டானாம்.முருகன் மரத்திலிருந்து பறித்துப் போட்ட நாவல் பழத்தில் ஒட்டியிருந்த மண் துகள்களைப் போக்குவதற்காக அவ்வை உதடு குவித்து ஊதிய போது பாட்டி, பழம் சுடுகிறதா? என்று கூறி முருகன் சிரித்தானாம். அதுபோல ராமன் வனவாசம் போனபோது உண்ட கனிகளிலில் நாவல் பழத்துக்கும் முக்கிய இடம் உண்டாம்.

இப்படி நாவல் பழத்தின் முக்கியத்துவத்தை பல புராணக் கதைகள் சுட்டிக் காட்டியதாலோ என்னவோ நமது முன்னோர்கள் கிணற்று மேடு, குளக்கரை, கோவில்கள், சாலையோரம் என பல இடங்களிலும் நாவல் மரங்களை வளர்த்து வந்தார்கள்.ஆனால் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் கிராமப்புறங்களில் நாவல் மரங்களைக் காண்பது அரிதானதாக மாறி விட்டது.

வீரிய ஒட்டு ரகம்

சமீப காலங்களாக நாவல் பழத்திலுள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இதனால் நாவல் பழத்துக்கு நல்ல விலை கிடைக்கத் தொடங்கியுள்ளதால் உடுமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் விவசாயிகள் தனிப்பயிராக நாவல் மரங்களை சாகுபடி செய்துள்ளனர்.ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் நாவல் பழங்கள் ஆடி மாதத்தில் அறுவடைக்குத் தயாராகி விடும்.அதேநேரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்திரை மாதத்திலேயே நாவல் பழ அறுவடை தொடங்கி விடும்.ஆனால் நடப்பு ஆண்டில் சற்று தாமதமாக சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது வியாபாரிகள் அங்கிருந்து உடுமலை பகுதிக்கு நாவல் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.வீரிய ஒட்டு ரக நாவல் பழங்கள் அளவில் பெரியதாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ளதால் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர்.சில்லறை விற்பனை விலையில் ஒரு கிலோ நாவல் பழங்கள் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சத்து

நாவல் பழங்களுக்கு உமிழ் நீர் சுரப்பைத் தூண்டும் தன்மை உள்ளதால் செரிமானம் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்ததால் மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது.குறைந்த அளவு குளுக்கோசையும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.நாவல் பழத்திலுள்ள ஒலினோலிக் அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இது உள்ளது.

இதிலுள்ள ட்ரைடென்போயிட் என்ற பொருள் உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.இதனால் உடல் பருமனாவதையும், இதய நோய்கள் உருவாவதையும் குறைக்கிறது.நாவல் பழத்திலுள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.சருமப் பொலிவை அதிகரிக்கவும், பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கவும் உதவும் வைட்டமின் சி மற்றும் புற்று நோய் செல்களைத் தடுக்கும் பாலிபீனால்கள், ஆந்தோசையனின், பிளவனாய்டுகள், காலிக் அமிலம் கொண்டது.இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட நாவல் பழங்களை கடவுளின் பழம் என்று அழைப்பது பொருத்தமானதாகவே உள்ளது.


Related Tags :
Next Story