தேனி தாலுகா அலுவலகத்தை பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகை
தாசில்தாரை கண்டித்து தேனி தாலுகா அலுவலகத்தை பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனியில் அரசு கேபிள் டி.வி. சேவைக்கு இணைப்பு பெறுவது தொடர்பான பிரச்சினையில், கேபிள் டி.வி. தாசில்தாரை கண்டித்தும், தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில், நிர்வாகிகள் பலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக தேனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இதையறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தாலுகா அலுவலக நுழைவு வாயில் பூட்டப்பட்டது. போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவதற்கு உரிமம் பெற்றவருக்கு சிக்னல் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், கட்டுப்பாட்டு அறையை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில், கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.