தேனியில் ராஜவாய்க்காலை தூர்வாராததை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம்


தேனியில் ராஜவாய்க்காலை தூர்வாராததை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2023 2:45 AM IST (Updated: 6 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ராஜவாய்க்காலை தூர்வாராததை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் வாளியில் கழிவுநீரை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

தேனியில் ராஜவாய்க்காலை தூர்வாராததை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் வாளியில் கழிவுநீரை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜவாய்க்கால்

தேனியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் ராஜவாய்க்கால் உள்ளது. கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் தொடங்கி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, ராஜாக்களம் வழியாக தாமரைக்குளம் கண்மாய் வரை இந்த வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ராஜவாய்க்காலில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீரை ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சாக்கடை கழிவுநீர்

அப்போது அவர்கள், ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும், அதைக்கண்டித்து சாக்கடை கழிவுநீரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், ராஜவாய்க்காலை தூர்வாரக்கோரி கோஷங்கள் எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில், மாவட்ட இணைச்செயலாளர் எம்.பி.எஸ்.முருகன் மற்றும் நிர்வாகிகள் சாக்கடை கழிவுநீர் எடுத்து வந்த வாளியுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர்.

தூர்வார வேண்டும்

அந்த வாளியை மாவட்ட வருவாய் அலுவலர் அறைக்கு வெளியே வைத்துவிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்து முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் கழிவுநீரை கொண்டு வந்த வாளியை கலெக்டர் அலுவலக வெளிப்புற வளாகத்தில் ஒரு ஓரமாக வீசிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story