தொழிலாளர்களுக்காக போராடிய 5 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணிநீக்கம் மீண்டும் வேலை வழங்க கோரிக்கை
தொழிலாளர்களுக்காக போராடி பணிநீக்கம் செய்யப்பட்ட 5 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள், மீண்டும் வேலை வழங்க கோரிக்கை கலெக்டா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
விழுப்புரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள், தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து கடந்த 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியதாகவும், ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்காக சட்டப்படி போராடியதற்காகவும் முனியன், மணிகண்டன், கலிவரதன், ஏழுமலை, மோகன் ஆகியோரை நகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது.
இதுபற்றி கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் முறையிட்டும் இதுவரையிலும் அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படவில்லை. எனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வரும் அவர்களின், குடும்ப நலனை கருதி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.