ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்களை நவீன கருவிகள் மூலம் ஆய்வு
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்களை நவீன கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்களை நவீன கருவிகள் மூலம் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அகழாய்வு பணி
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தும் வகையில் 'சைட் மியூசியம்' அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான நெற்றிபட்டயம், காதணி போன்ற ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
நவீன கருவிகள் மூலம் ஆய்வு
இந்த நிலையில் அகழாய்வில் கிடைத்த பழங்கால உலோக பொருட்களை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடிஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உலோக தொல்லியல் ஆய்வாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாரதா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆதிச்சநல்லூருக்கு வந்தனர். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால உலோக பொருட்களை பார்வையிட்ட அவர்கள், அவற்றை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.
தூய்மையான தங்கம்
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த உலோக பொருட்களை எக்ஸ்.ஆர்.எப். எனும் நவீன கருவி மூலம் உலோக தொல்லியல் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதன்மூலம் உலோகத்தில் உள்ள கனிமங்களை எளிதில் பிரித்தறிய முடியும். இங்கு கிடைத்த பழங்கால நெற்றிபட்டயமானது மிகவும் தூய்மையான தங்கம் என்பதை கண்டறிந்துள்ளனர். அகழாய்வில் கிடைத்த பெரும்பாலான உலோக பொருட்களில் டின் எனும் தனிமம் 6 முதல் 50 சதவீதம் வரையிலும் உள்ளது. இதனை கண்ணாடி போன்றவை தயாரிக்கவும் தற்போது பயன்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்தனர்.