ரூ.12 கோடியில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ.12 கோடியில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
நாகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.12 கோடியில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழா
நாகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம். எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம், சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் மற்றும் வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில்களில் திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
இணை ஆணையர்-உதவி ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் 16 பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி நாகையில் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி மற்றும் சிக்கல் நவநீதேஸ்வரசுவாமி கோவிலில் ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி போன்ற பணிகளை தொடங்கி வைத்துள்ளார் என்றார். இதில் நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.