பழ வியாபாரி கொலையில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
வாடிப்பட்டியில் பழ வியாபாரி கொலையில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டியில் பழ வியாபாரி கொலையில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழவியாபாரி கொலை
வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் ஆபீஸ் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). பழ வியாபாரி. இந்த நிலையில் தாதம்பட்டி ஒட்டன்குளக்கரை கால்நடை மருத்துவமனை அருகில் நடைபாதையில் முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், குற்றவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்குமார், வெங்கடேஷ், மணிகண்டன், ஏட்டுகள் விஜய், செல்லப்பாண்டி, கார்த்திக், தன பாண்டி உள்ளிட்ட தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் தாதம்பட்டி கண்மாய் புளியந்தோப்பு பகுதியில் பதுங்கி இருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது தாதம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் வினோத்குமார் (வயது19), ராமசந்திரன் மகன் சூரியபிரகாஷ் (19) மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் என்று தெரியவந்தது. மேலும் பழ வியாபாரி முருகனை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில் பழ வியாபாரி முருகன் கடந்த 3 நாட்களாக அந்த பகுதிக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்து பேசி இருக்கிறார். இதை கவனித்த இவர்கள் இது எங்க ஏரியா என கூறி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதில் முருகனுக்கும், 4 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு உடைந்து கிடந்த தடுப்பு கம்பியை எடுத்து முருகனை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேேய பலியாகி இருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.