வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி: சேலத்தில் செல்போன் இணைப்பகம் கண்டுபிடிப்பு-300 சிம்கார்டுகள் பறிமுதல்; மர்ம நபருக்கு வலைவீச்சு


வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி: சேலத்தில் செல்போன் இணைப்பகம் கண்டுபிடிப்பு-300 சிம்கார்டுகள் பறிமுதல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
x

சேலத்தில் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்பாக மாற்றி மோசடி செய்வதற்காக சட்டவிரோதமாக செயல்பட்ட செல்போன் இணைப்பகம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 300 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

செல்போன் இணைப்பகம்

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் பெங்களூருவை சேர்ந்த மர்மநபர் ஒருவர், கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் சிம்பாக்ஸ் என்கிற சட்டவிரோதமாக செல்போன் இணைப்பகம் மூலம் வெளிநாட்டு செல்போன் அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது குறித்து தொலைதொடர்பு துறை அலுவலக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் கியூ பிரிவு போலீசார் மற்றும் கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அந்த மர்ம நபர் வசித்து வந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது தெரியவந்தது. அங்கு போலீசார் சென்ற போது, அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

300 சிம்கார்டுகள்

அப்போது அங்கு செல்போன் எண்களை ஹேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் 16-க்கும் மேற்பட்ட சிம்பாக்ஸ்கள், 300-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் செல்போன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அனைத்தையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.

பின்னர் இந்த அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த மர்ம நபர் யார்?, அவருக்கு தீவிரவாத அமைப்புடன் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி அடையாள அட்டை

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்று வீட்டின் உரிமையாளரிடம் போலியான அடையாள அட்டையை கொடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் தினமும் மோட்டார் சைக்கிளில் அந்த நபர் வந்து சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் யார்? என்பது குறித்து தெரியாததால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட செல்போன் இணைப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story