போலி பத்திரங்கள் தயாரித்து ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை கிரையம் செய்து மோசடி
போலி பத்திரங்களை தயாரித்து ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
போலி பத்திரங்களை தயாரித்து ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.15 கோடி
கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் முத்துக்குமார் (வயது 52) என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு சங்கனூரில் என்னுடன் சேர்த்து 8 பேருக்கு சொந்தமான சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 12 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கோவை மாவட்டம் கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து தனது பெயரில் கிரையம் செய்து கொண்டு உள்ளார். ரியல் எஸ்டேட் அதிபரான துரைசாமி இந்த நிலத்தை கடந்த 2000-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்து உள்ளார். எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அதன்பிறகு இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தினார்.
போலி ஆவணங்கள்
இந்த விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:-
ரியல் எஸ்டேட் அதிபரான துரைசாமி அவரது தாய் செல்லம்மாள் பெயரில் கடந்த 2000-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 2.2 சென்ட் நிலத்தை வாங்கினார். அதன்பிறகு அந்த நிலத்தை துரைசாமி தனது பெயரில் மாற்றி கொண்டார். இதற்கான பத்திரப்பதிவை சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் செய்தார். இந்த நிலத்தை கிரையம் செய்தபோது முத்துக்குமார் உள்பட 8 பேருக்கு சொந்தமான வெள்ளக்கிணறு சங்கனூரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் துரைசாமி தனது பெயரில் கிரையம் செய்து கொண்டார்.
அப்போது 12 ஏக்கர் நிலமும் அவரது தாத்தாவுக்கு சொந்தமானது போலவும், அவரது தாயின் சகோதரர்கள் அந்த நிலத்தை அவரது தாயின் பெயருக்கே எழுதி வைத்தது போலவும் போலி பத்திரங்களை துரைசாமி தயார் செய்து உள்ளார். மேலும் வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், நீதிமன்ற அனுமதி கடிதம் போன்றவற்றையும் போலியாக தயாரித்து சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
கைது
இந்த மோசடியில் ஈடுபட்டதாக துரைசாமி உள்பட 6 பேர் மீது மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் துரைசாமி கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று துரைசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.