நிதி நிறுவனம் நடத்தி மோசடி; நிர்வாக இயக்குனர் கைது
நாகர்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
நிதி நிறுவனம் நடத்தி மோசடி
கன்னியாகுமரி அருகில் உள்ள தெற்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 46). இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் இயங்கி வந்த பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக தெரிகிறது.
மேலும் நிதி நிறுவனத்தை நடத்தியவர்களும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி பூமா அக்ரோடெக் லிமிடெட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நிர்வாக இயக்குனர் கைது
மேலும் அந்த நிதி நிறுவனத்தை நடத்திய அதன் நிர்வாக இயக்குனரான நெய்யூர் அருகில் உள்ள நெல்லியார்கோணத்தைச் சேர்ந்த சங்கர் (49) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குமரேசன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை மதுரையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் நாகர்கோவிலில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் தெரிவித்துள்ளார்.