ரூ.60 லட்சம் கடன் வாங்கி திருப்பி தராமல் மோசடி: கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு


ரூ.60 லட்சம் கடன் வாங்கி திருப்பி தராமல் மோசடி: கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு
x

ரூ.60 லட்சம் கடன் வாங்கி திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகி மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கொலை மிரட்டல்

கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 49). இவர் திருச்சி சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் தொழில் செய்வதாக கூறி கடந்த 2017-ம் ஆண்டு 2 தவணையாக ரூ.60 லட்சம் வாங்கினார். அதன் பிறகு பல முறை கேட்டும் அந்த பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி எனது செல்போனுக்கு தொடர்பு கொண்ட முருகானந்தம் என்னையும், என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும், மத ரீதியாகவும் இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 பிரிவுகளில் வழக்கு

இதையடுத்து, சாகுல்ஹமீது கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கீரமங்கலம் போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன்பேரில் கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், முருகானந்தம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முருகானந்தம் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜனதா பொருளாளராக உள்ளார். இவரது வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதா நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவாகி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story