சங்கராபுரம்நிதிநிறுவனத்தில் ரூ.18 லட்சம் கையாடல்; 2 ஊழியர்கள் கைதுமேலும் ஒருவருக்கு வலைவீச்சு
சங்கராபுரம் நிதிநிறுவனத்தில் ரூ.18 லட்சம் கையாடல் செய்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனா்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சங்கராபுரம் அருகே உள்ள மரூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் அய்யப்பன் என்பவர் உதவி மேலாளராகவும், தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ், மூக்கனூர் கிராமம் ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோர் மக்கள் தொடர்பு பணியாளர்களாகவும் பணிபுரிந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்துவிட்டதாக கூறி, கிளை மேலாளர் அய்யனார் (33) சங்காபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த போது மேற்கூறிய 3 பேரும் உறுப்பினர்களிடம் இருந்து தனிதனியாக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. மொத்தம் 67 உறுப்பினரிடமிருந்து 17 லட்சத்து 98 ஆயிரத்து 964 கையாடல் செய்துள்ளனர். பணத்தை திரும்பி கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தொிவித்து இருந்தார்.
இது குறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்கு பதிவு செய்தார். இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், செண்பகவல்லி, போலீசார் உதயகுமார், வெங்கடேசன் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, 3 பேரையும் தேடிவந்தனர். இதில், அய்யப்பனை சங்காரபுரம் தாலுகா அலுவலகம் எதிரே வைத்தும், தினேஷை சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் வைத்தும் போலீடுசார்கைது செய்தனர். மூக்கனூரை சேர்ந்த அய்யப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.