குறைந்த விலையில் வீட்டு பொருட்கள் தருவதாக நூதன முறையில் மோசடி
குடியாத்தம் அருகே குறைந்த விலையில் வீட்டு பொருட்கள் தருவதாக நூதன முறையில் மோசடி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமம் கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சசிகலா (வயது 30). இவரது வீட்டுக்கு கடந்த புதன்கிழமை சோப்பு விற்பதாக சிலர் வந்துள்ளனர். அவர்களிடம் சசிகலா சோப்பு வாங்கி உள்ளார். அப்போது அந்த நபர்கள் எங்களிடம் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளது. அதை குறைந்த விலையில் தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சசிகலா அவர்களிடம் ரூ.2,000 கொடுத்துள்ளார். உடனே அவர்கள் 3 குக்கர், சலவை பெட்டி கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் பல ஆயிரம் மதிப்புள்ள சோபா, மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ரூ.7,500-க்கு தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் ரூ.7,500 செலுத்தியுள்ளார். அதன்பின் பொருட்களை அனுப்ப கேட்டதற்கு பொருட்களை அனுப்ப கட்டணமாக ரூ.1,750 கேட்டுள்ளனர். அதனையும் அவர் கடன் வாங்கி அனுப்பி உள்ளார். ஆனால் பொருட்கள் வரவில்லை.
அவர்கள் அளித்த போன் நம்பரில் தொடர்பு கொண்ட போது சரிவர பதில் சொல்லாமல் மிரட்டும் வகையில் பேசி உள்ளனர். இதனையடுத்து சசிகலா தங்களை நூதன முறையில் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.