கடன் செயலி மூலம் மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: வடமாநில பெண் உள்பட 4 பேர் கைது
கடன் செயலி மூலம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடன் செயலி மூலம் பொதுமக்கள் கடன் வாங்கி மோசம் போக வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சென்னை,
கடன் செயலி மூலம் கடன் கொடுப்பதுபோல கொடுத்து, பின்னர் கடனை திருப்பி செலுத்தாதவர்களை மிரட்டி, கடன் தொகையைவிட அதிக அளவில் பணம் பறிக்கும் கலாசாரம் இந்தியா முழுவதும் பரவி வந்தது. பெரிய அளவில் மோசடி கும்பல் ஒன்று இந்த செயலில் ஈடுபட்டு வந்தது. கடன் செயலி மூலம் எளிதில் கடன் தொகை கிடைத்துவிடும், என்ற ஆசையில் பொதுமக்கள் இதன் மூலம் கடன் பெறுகிறார்கள். கடனை திருப்பி செலுத்தாவிட்டால், கடன் கொடுத்த கும்பல், கடன் வசூலிக்கும் பொறுப்பை மிரட்டல் கும்பலிடம் ஒப்படைத்து விடுவார்கள். அந்த கும்பலிடம் கடன் வாங்கியவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார்கள். இந்தியா முழுவதும் இந்த மோசடி மிரட்டல் கும்பலிடம் சிக்கி 45 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் 6 புகார்கள்
சென்னையில் இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட 6 பேர் புகார் கொடுத்தனர். அதில் ஒரு புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் இதுபற்றி விசாரித்தார்கள். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, சைபர் கிரைம் துணை கமிஷனர் கிரண் ஸ்ருதி ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் ஷாஜிதா, உதவி கமிஷனர் கிருத்திகா, இன்ஸ்பெக்டர் கலைஅரசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் செயல்படுவது கண்டறியப்பட்டது. தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் மற்றும் அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு நேரில் சென்று 4 குற்றவாளிகளை மடக்கினார்கள்.
பெண் உள்பட 4 பேர் கைது
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபக்குமார் பாண்டே (வயது 26) என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர் (24) அவரது சகோதரி நிஷா (22) டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகியோர் கைதானார்கள்.
இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினோம். நீதிமன்ற காவலில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் 50 பேர் வரை வேலை செய்கிறார்கள். ஒரு அலுவலகம் மட்டும் தொடங்கி அதில் உட்கார்ந்தபடியே மோசடியை இந்தியா முழுவதும் அரங்கேற்றி உள்ளனர். தினமும் ரூ.1 கோடி வரை இவர்களிடம் பணம் புழக்கத்தில் உள்ளது. இந்த கும்பலின் முக்கிய புள்ளி பீகார் மாநிலத்தில் தலைமறைவாக உள்ளார். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலிடம் கடன் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.