நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறிகல்லூரி விரிவுரையாளரிடம் ரூ.1 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி தனியார் கல்லூரி விரிவுரையாளரிடம் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் முகமது இக்பால் மகன் முகமதுமசுரு(வயது 37) விழுப்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனை தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், 6 சதவீத வட்டியில் கடன் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய முகமதுமசுரு, தன்னுடைய வீடு கட்டும் வேலைக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த நபரிடம் தனக்கு கடனுதவி தேவை எனக்கூறினார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர், உங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்குமாறு கூறி வாட்ஸ்-அப் எண்ணை கொடுத்துள்ளார்.
ரூ.1.18 லட்சம் மோசடி
அதன்படி அவர், தன்னுடைய விவரங்களை அந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு பேசிய நபர், ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி அந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்த நகர்வு கட்டணம், ஆவண கட்டணம், இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த கல்லூரி விரிவுரையாளர், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு 6 தவணைகளாக தனது கூகுள்பே மூலம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 950-ஐ அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், கல்லூரி விரிவுரையாளருக்கு கடன் தொகை ஏதும் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து கல்லூரி விரிவுரையாளர் முகமதுமசுரு விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.