பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 30-ந் தேதி இவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
பகுதி நேர வேலை கிடைக்கும் என நம்பிய நித்யஸ்ரீ அதில் கூறிய தகவல்கள் படி நடைமுறை செலவுகளுக்காக ரூ.12 லட்சத்து 5 ஆயிரம் தொகையை குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளில் செலுத்தினார். இதன் பிறகு அவருக்கு குறுந்தகவல்கள் வரவில்லை. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது-.
போலீசார் விசாரணை
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நித்யஸ்ரீ இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.