தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.13½ லட்சம் மோசடி
வாலாஜாவில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.13½ லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாவில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.13½ லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி நகைகளை வைத்து ரூ.13½ லட்சம் மோசடி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பஜார் வீதியில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நெமிலி தாலுகா நெடும்புலி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (வயது 36) மற்றும் கொசத் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் அஜித் (22) ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக நகைகளை அடகு வைத்து பணம் பெற்று சென்றுள்ளனர்.
இருவரும் இதுவரை 50 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் வரை கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவன புதிய மேலாளர் அன்பரசு, அடகு நகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் அடமானம் வைத்த 50 பவுன் நகை அனைத்தும் முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவர் மீதும் வாலாஜா போலீஸ் நிலையத்தில், நிதி நிறுவன மேலாளர் அன்பரசு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
தொடர்ந்து இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இருவரும் இதுபோன்று வேறு எங்காவது போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு உள்ளனரா என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.