தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 கோடி மோசடி


தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 கோடி மோசடி
x

செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏஜெண்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏஜெண்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, சாதி சான்று, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளான உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 526 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கல்வி உதவித்தொகை

மேலும் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் 11 தூய்மை பணியாளர்களது குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.23 ஆயிரம் மற்றும் ஒரு தூய்மை பணியாளருக்கு மகப்பேறு குழந்தை பிறப்பு உதவி தொகை ரூ.6 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.29 ஆயிரம் மதிப்பில் 12 நபர்களுக்கு வங்கி வரைவோலையினை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன், வேளாண்மை துறை இணை இயக்குனர் அரக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீட்டு பணம் மோசடி

செய்யாறு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் சீட்டு நடத்தியவர்கள் சுமார் ரூ.17 கோடி வரை மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட அந்த நிதி நிறுவனத்தின் ஏஜெண்டுகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

செய்யாறு பகுதியில் அலுவலகம் வைத்து தனியார் நிதி நிறுவனம் ஒன்றை கணவன்- மனைவி ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் மூலம் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், குழுக்கள் சீட்டு மற்றும் ஆறு மாத ஆபர் நகை சீட்டு போன்றவை நடத்தப்பட்டது.

இதில் ஏஜெண்டுகளாக திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு மட்டுமின்றி, சென்னை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தோம். நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இந்த சீட்டில் இணைத்து அவர்களிடம் இருந்து ரூ.100 முதல் 4,000 வரை மாதத் தவணையாக 20 மாதங்களுக்கும் மேலாக வசூல் செய்து நிதி நிறுவனத்தில் வழங்கி வந்தோம்.

ஆனால் நிறுவனத்தினர் எங்களுக்கு வழங்க வேண்டிய நகையையும், மளிகை பொருட்கள் அனைத்தையும் கொடுக்காமல் எங்களை ஏமாற்றி வந்தார்கள். தற்போது அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் அலுவலகத்தையும் மூடி விட்டனர். இதனால் எங்களிடம் பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்டு எங்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

நிதி நிறுவனத்தினால் நாங்கள் சுமார் ரூ.17 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அவர்களிடமிருந்து நாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி

கீழ்பென்னாத்தூர் தாலுகா ராஜந்தாங்கல் ஊராட்சி இலுப்பந்தாங்கல் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இலுப்பந்தாங்கல் கிராமத்தில் முறையற்ற தண்ணீர் வினியோகத்தை, சுகாதாரமான குடிநீர் அனைத்து குடும்பங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலத்தை போக்க பொதுக்கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும். பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட வேண்டும்.

பகுதிநேர நூலகம் அமைத்து தர வேண்டும். இளைஞர்களுக்கு உடற் பயிற்சி கூடம் நிறுவ வேண்டும். தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.

மயானத்தையொட்டி உள்ள புறம்போக்கு இடங்களை அளவீடு செய்து மயான விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயதொழில் மேம்பாட்டு திறன் மிக்க பயிற்சிகள் அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story