போலியாக நிவாரண பட்டியல் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி


போலியாக நிவாரண பட்டியல் தயாரித்து ரூ.2¾ கோடி மோசடி
x

கஜா புயலில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதாக போலியாக நிவாரண பட்டியல் தயார் செய்து ரூ.2¾ கோடி மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்

கஜா புயலில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதாக போலியாக நிவாரண பட்டியல் தயார் செய்து ரூ.2¾ கோடி மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி பகுதியை சேர்ந்தவர் அட்சயகுமார். இவர் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி ஒரு புகார் அளித்தார்.

இந்த புகாரில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் ஏராளமான தென்னை மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

போலி ஆவணங்கள்

இதை பயன்படுத்தி அப்போது நாலுவேதபதி கிராம நிர்வாக அலுவலராக இருந்த சத்தியவான் (தற்போது வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு 3-ம் சேத்தி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்), கோவில்பத்து உதவி வேளாண் அலுவலராக இருந்த ரவிச்சந்திரன் (தற்போது தலைஞாயிறு வட்டாரம் நீர்முளை உதவி வேளாண் அலுவலராக உள்ளார்) ஆகியோர் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயார் செய்து கஜா புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களின் நிவாரணத்தில் முறைகேடு செய்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.இதையடுத்து அந்த மனு மீது விசாரணை நடத்த நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

ரூ.2 கோடியே 75 லட்சம் மோசடி

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சித்ரவேலு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிராம நிர்வாக அலுவலர் சத்தியவான், கோவில்பத்து உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கஜா புயலில் தென்னை மரங்கள் சேதமடைந்ததாக போலியாக சர்வே எண் மற்றும் சாகுபடி செய்தது போல நிவாரண பட்டியல் தயார் செய்து ரூ.2 கோடியே 75 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியவான், வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story