வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி அரசு ஊழியரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அலுவலக உதவியாளர்
விக்கிரவாண்டி தாலுகா மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 40). இவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அலைஸ்ஜான்சன் என்ற முகநூல் முகவரி கொண்ட நபரிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயப்பிரகாசை வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்ட நபர், தனது பெயர் சிஸ்டர் அலீஷா மேரிஜான் என்றும், தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறி நட்பாக பழகினார். பின்னர் கடந்த 9-ந் தேதியன்று அவர், ஜெயப்பிரகாசை தொடர்புகொண்டு தனது பெற்றோரின் திருமண நாள் விழாவிற்காக வெளிநாட்டு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி அதன் புகைப்படங்களையும் ஜெயப்பிரகாசின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி வைத்தார்.
ரூ.2 லட்சம் மோசடி
மேலும் அன்றைய தினம் ஜெயப்பிரகாசை தொடர்புகொண்ட ஒருவர், தான் டெல்லியில் உள்ள தேசிய விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை பெற டெலிவரி கட்டணத்திற்கு பணம் கட்ட வேண்டுமென கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயப்பிரகாஷ், அந்த நபர் கூறியவாறு அவரது வங்கி கணக்கிற்கு கடந்த 11-ந் தேதியன்று ரூ.33,751-ஐ கூகுள்பே மூலம் செலுத்தியுள்ளார். அதன் பின் அந்த நபர் மீண்டும் ஜெயப்பிரகாசை தொடர்புகொண்டு பார்சலில் வெளிநாட்டு கரன்சி இருப்பதாகவும், ஏ.எம்.எப். சான்றிதழுக்காக பணம் கட்டினால்தான் மொத்த பார்சலையும் டெலிவரி பெற முடியும் என்றார். இதனால் ஜெயப்பிரகாஷ், தனது உறவினரிடம் கடன்பெற்று ஏற்கனவே அனுப்பிய அதே வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறாக மொத்தம் ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 751-ஐ அனுப்பி வைத்தபோதிலும் பரிசுப்பொருளை ஜெயப்பிரகாசுக்கு அனுப்பாமல் மேலும் பணம் கேட்டு மர்ம நபர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.