இரட்டிப்பு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி


இரட்டிப்பு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:15:46+05:30)

ஊட்டியில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஆன்லைன் செயலி மூலம் லிங்க் அனுப்பி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஆன்லைன் செயலி மூலம் லிங்க் அனுப்பி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2 லட்சம் மோசடி

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர் பணி நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பணம் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தகவல்களை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் செயலி மூலம் வாலிபருக்கு லிங்க் அனுப்பப்பட்டது.அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தரப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வங்கி கணக்கு மூலம், செயலியில் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 484 செலுத்தி உள்ளார். ஆனால், பணம் அனுப்பிய பின்னர் ஒரு வார காலமாக அவருக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. இவர் குறிப்பிட்ட செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

போலீசார் விசாரணை

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர், இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி வைத்து உள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் கூறியதாவது:-

தற்போது டெலிகிராம் செயலியை பயன்படுத்துபவர்களை மோசடி ஆசாமிகள் குறி வைத்து மோசடி செய்து வருகின்றனர். ஏனென்றால் மற்ற செயல்பாடுகள் மூலம் ஏமாற்றினால், அந்த செயலி அல்லது செல்போன் எண் மூலம் மோசடி ஆசாமிகளை எளிதில் பிடித்து விடலாம். ஆனால், அந்த செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்களை செயலி நிர்வாகம் தருவதில்லை. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கடந்த 10 நாட்களில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story