பெண்ணிடம் ரூ.24 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
பெண்ணிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொள்ளிடம்டோல்கேட்:
வேலை வாங்கி தருவதாக...
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் புனிதா ரோசிட்ட மலர்(வயது 40). இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி மேல பெருங்காவூர் நடுத்தெருவை சேர்ந்த ரூபா(38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புனிதா ரோசிட்ட மலர் வேலை தேடிக்கொண்டிப்பதை அறிந்த ரூபா அவரிடம், தன் கணவர் ஜெரால்டு ரூபனிடம்(42) கூறி ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய புனிதா ரோசிட்ட மலர், தனக்கும், தனது சகோதரர் ஆண்டனிக்கும் சேர்த்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை ரூபா மற்றும் ஜெரால்டு ரூபன் ஆகியோரிடம் பல தவணைகளில் மொத்தம் ரூ.24 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் ஜெரால்டு ரூபன் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
தம்பதி மீது வழக்கு
இதனைத்தொடர்ந்து அவரிடம் புனிதா ரோசிட்டமலர் பணத்தை திருப்பி கேட்டபோது, அதனை தர மறுத்துள்ளனர். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூபா மற்றும் ஜெரால்டு ரூபன் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ரூபா, ஜெரால்டு ரூபன் ஆகியோர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புனிதா ரோசிட்டமலர் புகார் அளித்தார்.
அதன்பேரில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கொள்ளிடம் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் ரூபா, ஜெரால்டு ரூபன் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.