வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி


வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி
x

ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு

வந்தவாசி தாலுகா கீழ்வில்லிவல்லம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யாபிரவினா. இவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பி.எஸ்சி. நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தேன்.

கடந்த 2019-ம் ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பாக தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் பதிவு செய்திருந்தேன். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இ-மெயில் முகவரி மூலம் ஒரு நபர் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் யுனைடெட் ஸ்டேட்சின் வான்வழி விமானப்படையில் வேலை செய்வதாகவும், தனது மனைவியின் இடுப்பில் அடிப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு உதவி செய்ய நர்ஸ் தேவைப்படுவதாக கூறினார்.

மேலும் இங்கிலாந்திற்கு பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் அங்கு பணிக்கு வர வேண்டும் என்றால் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளது.

ரூ.4½ லட்சம்

அதற்கு பல அனுமதி சான்றிதழ் தேவைப்படும் என்றும், அச்சான்றிதழ்கள் வாங்குவதற்கு அனுமதி பெற ரூ.4½ லட்சம் செலவாகும் என்று மெயில் அனுப்பினார்.

நானும் அத்தொகையை அவருக்கு கூகுல் பே மூலம் மொத்தமாக அனுப்பாமல் பணம் கிடைக்கும் சமயத்தில் குறிப்பிட்ட தொகையாக அனுப்பி வைத்தேன்.

அந்த நபரும், அவரது வக்கீல் என்று பேசிய நபரும் அளித்த நம்பிக்கையின் பேரில் பணத்தை பரிமாற்றம் செய்தேன். கடந்த அக்டோபர் மாதம் வரை தொடர்பில் இருந்த அவர்கள் அதன்பின் தொடர்பை துண்டித்தனர். என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

என்னை நம்ப வைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4½ லட்சத்தை ஏமாற்றி விட்டனர்.

மீட்டு தர வேண்டும்

எனவே என்னை ஏமாற்றிவர்களை கண்டுபிடித்து ஏமாற்றிய பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.


Next Story