வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக 16 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி; தம்பதி கைது
வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ40 லட்சம் மோசடி செய்த சென்னை தம்பதி கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 35). இவருடைய மனைவி சலோமி பெபினா (32). இவர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் விவரங்களை சேகரித்து உள்ளனர். பின்னர் அவர்களிடம், 'வெளிநாட்டு கப்பலில் வேலைக்குச் சென்றால் அதிகமாக சம்பாதிக்கலாம். எங்களால் அந்த கப்பலில் வேலைக்கு சேர்த்து விட முடியும்' என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பிய 13 பேரிடம் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஈரானுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு குறைவான ஊதியம் உள்ள வேலையில் அமர்த்திவிட்டு ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேரிடம் ரூ.10 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து 16 பேரிடம் மொத்தம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக அகஸ்டின், அவரது மனைவி சலோமி பெபினா ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.