திண்டிவனத்தில் பைனான்சியரிடம் ரூ.41 லட்சம் மோசடி
பைனான்சியரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்த திண்டிவனம் மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 40). இவர் கடந்த சில மாதத்திற்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், நான் பைனான்சியர் தொழில் நடத்தி வருகிறேன். எனது அலுவலகத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் (43) என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அவர் தொழில் விஷயமாக வட்டிக்கு பணம் கேட்டார். அவரது பேச்சை நம்பி முதலில் ரூ.18 லட்சம் கொடுத்தேன். இதற்கு மாதம், மாதம் வட்டி செலுத்தி வந்த நிலையில், அவரது மனைவி அலிமாபானுவுடன் (41) வந்து மேலும் பணம் கேட்டதால் இதுவரை மொத்தம் ரூ.41 லட்சத்தை கொடுத்துள்ளேன்.
ஆனால் இந்த பணத்தை எனக்கு திருப்பிக்கொடுக்காமல் இருவரும் ஏமாற்றி வருகின்றனர். அபுபக்கரிடம் கேட்டபோது என்னை திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு அம்மனுவில் கூறியிருந்தார்.
மளிகை கடைக்காரர் கைது
இந்த புகார் மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அபுபக்கர், அலிமாபானு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று அபுபக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.