என்ஜினீயரிடம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மோசடி
வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினீயரிடம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து நாகை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை செய்யும் என்ஜினீயரிடம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து நாகை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகண்ணன். இவரது மகன் அவினாஷ் கண்ணன் (வயது 34). இவர், இங்கிலாந்து நாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி அவினாஷ் கண்ணனை டெலிகிராம் ஆப் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, இங்கிலாந்து நாட்டில் பகுதி நேரமாக பணியாற்றினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
ரூ.5 லட்சத்து 80 ஆயிரம்
இதை நம்பிய அவினாஷ் கண்ணன் அவரது தந்தை வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ஆகஸ்டு மாதம் வரை பல தவணைகளில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் வரை செலுத்தினார்.
ஆனாலும் பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்து அவினாஷ் கண்ணனுக்கு எந்த தகவலும் வரவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
இதையடுத்து அவர் டெலிகிராம் ஆப் மூலமாக தன்னிடம் பேசிய மர்ம நபரிடம் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த நபர் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அவினாஷ் கண்ணன் வேளாங்கண்ணியில் உள்ள தனது தந்தை ராஜகண்ணனிடம் தெரிவித்தார்.
உடனே அவர் இதுகுறித்து நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருக்குமரன் வழக்குப்பதிவு செய்து அவினாஷ் கண்ணனிடம் பண மோசடி செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.