அரசு வேலை வாங்கி தருவதாக விவசாயியிடம் ரூ.6½ லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக விவசாயியிடம் ரூ.6½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக தம்பதியிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

மோசடி

தேனி அருகே அரண்மனைப்புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 32). விவசாயி. இவர், தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வயல்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (39), அவருடைய மனைவி லதா (32) ஆகியோர் என்னிடம் நட்பாக பழகி வந்தனர். அவர்கள் தங்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என்றும், பலருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினர். எனது மனைவி திலகவதிக்கு சத்துணவு மையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதற்காக அவர்கள் இருவரிடமும் கடந்த ஏப்ரல் மாதம், ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தேன். 2 மாதத்தில் வேலைக்கு உத்தரவு வந்துவிடும் என்றனர்.

தம்பதி மீது வழக்கு

பின்னர் சென்னைக்கு சென்று வர என்று கூறியதால் அதற்கு ரூ.50 ஆயிரத்தை முத்துப்பாண்டியின் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினர். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ஆட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் இந்த மோசடி தொடர்பாக, முத்துப்பாண்டி, அவருடைய மனைவி லதா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story