அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.68 ஆயிரம் மோசடி


அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.68 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 19 Sept 2022 3:22 AM IST (Updated: 19 Sept 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.68 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்களிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

ஈரோடு

அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.68 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்களிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

அதிக லாபம்

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்' என குறிப்பிட்டு, அதனுடன் ஒரு செல்போன் எண் பதிவிடப்பட்டு இருந்தது. அந்த குறுஞ்செய்தியை உண்மை என நம்பி அந்த பெண் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அந்த எண்ணில் பேசிய மர்மநபர் குறைந்த முதலீடு செய்தால் சில மாதங்களில் நிறைய லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் முதல் கட்டமாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

ரூ.68 ஆயிரம்...

பின்னர் 2-வது முறையாக ரூ.32 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி லாபத்தையும், கொடுத்த பணத்தையும் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.14 ஆயிரத்தை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த பெண் இதுபற்றி ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்மநபரின் செல்போன் எண் பெங்களூரை சேர்ந்தது என்பதும், அவரது வங்கி கணக்கு ஆந்திராவில் உள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கி கணக்கை முடக்கி, ஈரோட்டை சேர்ந்த பெண்ணிடம் பறிக்கப்பட்ட ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணின் வங்கி கணக்கில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story