வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி போலீசார் விசாரணை
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
கடலூர் கே.கே.நகர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 61). தனியார் கம்பெனியில் கெமிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வந்த வீரபாண்டியன், வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் தனது முழு விவரங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீரபாண்டியனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தான் நியூசிலாந்தில் இருந்து பேசுவதாகவும் தனது பெயர் லாரன்ஸ் பிராங் என்றும், இங்கு வந்தால் மாதம் ரூ.7 லட்சம் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பாஸ்போர்ட்டு பெறுவதற்கு சில வழி முறைகள் உள்ளது எனவும், அதற்கு ரூ.53 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறினார். இதை நம்பிய வீரபாண்டியன் தனது வங்கி கணக்கில் இருந்து முதற்கட்டமாக ரூ.53 ஆயிரம் செலுத்தியுள்ளார்.
ரூ.15¾ லட்சம் மோசடி
இதேபோல் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு என பல்வேறு காரணங்களை கூறி மொத்தம் ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், வீரபாண்டியனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுதொடர்பாக வீரபாண்டியன், அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. அப்போது தான், அந்த நபர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டியன், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழிப்புணர்வு
இதுகுறித்து கடலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா கூறுகையில், சைபர் கிரைம் குற்றவாளிகள் முகநூல் மற்றும் டுவிட்டர் மூலம் போலியான வேலை வாய்ப்பை உருவாக்கி ஏமாற்றி வருகின்றனர். இதை நம்பி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் பணத்தை இழந்துள்ளனர். அதனால் முகநூல், கிப்ட், லோன் செயலி, கே.ஒய்.சி. அப்டேட் போன்ற ஆன்லைன் மோசடி நிறுவனங்களை நம்பி யாரும் ஏமாற ேவண்டாம். தெரியாத செயலிகளை பயன்படுத்தாமல், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.