குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிபெண்ணிடம் ரூ.24¾ லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிபெண்ணிடம் ரூ.24¾ லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.24¾ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களுக்கு போலீசாா் வலைவீசி உள்ளனா்.

விழுப்புரம்


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர், பகுதி நேர வேலை எனக்கூறி கூகுளில் வரும் புகைப்படத்திற்கு பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும் என்று வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்தார்.

இதைப்பார்த்த அப்பெண், அந்த நபர் கூறியவாறு செய்து முதலில் ரூ.300-ஐ பெற்றுள்ளார். பின்னர் டெலிகிராம் ஐடியில் இருந்து அப்பெண்ணை தொடர்பு கொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். உடனே அப்பெண், அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.5 ஆயிரம் செலுத்தி ரூ.6,600 ஆக திரும்பப்பெற்றார்.

அதன் பிறகு கடந்த 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம், அந்த நபர் அனுப்பச்சொன்ன 6 வங்கிகளின் கணக்கிற்கு 11 தவணைகளாக ரூ.24 லட்சத்து 80 ஆயிரத்து 847-ஐ அனுப்பினார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னர் அப்பெண்ணுக்கு தர வேண்டிய தொகையை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து அந்தப்பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story