மாநகராட்சி கட்டிட பணியில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ரூ.30 லட்சம் மோசடி ஒப்பந்ததாரர் மீது வழக்கு
நாகர்கோவில் மாநகராட்சி கட்டிட பணியில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி கட்டிட பணியில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஒப்பந்ததாரர்
இரணியல் நெல்லியார் கோணம் குழிவிளையை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 47), கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கட்டிட தொழில் செய்து வருகிறேன். எனக்கு மதுரை மாவட்டம் நரிமேடு சிங்கராயர் காலனி வடக்கு தெருவை சேர்ந்த சஞ்சய் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் அரசு ஒப்பந்ததாரர் ஆவார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணியை அவரது நிறுவனம் தான் செய்தது.
மோசடி
இந்தநிலையில் மாநகராட்சி அலுவலக கட்டிட வேலையை செய்து கொடுக்க வேலையாட்கள் காண்டிராக்டை எனக்கு தருவதாகவும், அந்த வேலை முடிந்ததும் முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளிக்குரிய புதிய கட்டுமான பணியை எனக்கு தருவதாகவும் கூறினார். அதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வேலையாட்களை பணிக்கு அமர்த்தி வேலை செய்து வந்தேன். பின்னர் தினமும் சுமார் 50 வேலையாட்களை கொண்டு 5 தளங்களுக்கு சுமார் 54 ஆயிரம் சதுர அடிக்கான வேலையை செய்து கொடுத்தேன்.
அதன்பிறகு வேலைக்கான பணத்தை அவர் கொடுத்தார். ஆனால் ஒப்பந்தத்தில் கூறிய முழு பணத்தையும் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மீதமுள்ள பணிகளை 24-12-2020 அன்று முடித்துக் கொடுத்தேன். பின்னர் வேலையாட்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை அவரிடம் கேட்டேன். ஒப்பந்தப்படி ரூ.84 லட்சத்து 15 ஆயிரத்து 300 கொடுக்க வேண்டும். ஆனால் ரூ.54 லட்சத்து 31 ஆயிரத்து 998 கொடுத்தார். மீதமுள்ள ரூ.29 லட்சத்து 83 ஆயிரத்து 302-ஐ அவர் தரவில்லை. இதுதொடர்பாக கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு
இந்த மனுவை விசாரித்த போலீசார் சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.