ரூ.45½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
சாரண, சாரணீயர் பணி வழங்குவதாக கூறி ரூ.45½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் விட்லாபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவருடைய பக்கத்து தெருவில் வசிப்பவர் ஏழுமலை மகன் சுரேஷ் (35). இவருக்கு தெரிந்த கோயம்புத்தூரை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர், அரசு பள்ளியில் சாரண சாரணீயர் பணி வாய்ப்பு உள்ளதாக சுரேசிடம் கூறியுள்ளார். இதுபற்றி முரளியிடம் சுரேஷ் கூறினார்.
இதை நம்பிய முரளி, சுரேசிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து கடந்த 20.7.2020 அன்று திண்டிவனத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பிரசாந்த் உத்தமனின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன் பிறகு வெவ்வேறு தேதிகளில் மேலும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை பிரசாந்த் உத்தமனின் வங்கி கணக்கிற்கு முரளி அனுப்பியுள்ளார்.
ரூ.45½ லட்சம் மோசடி
அதன் பிறகு சில நாட்கள் கழித்து இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் சாரண சின்னம் பொருத்திய வேலைவாய்ப்பு கடிதத்தை சுரேஷ் மூலமாக முரளிக்கு பிரசாந்த் உத்தமன் அனுப்பினார். பின்னர் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வந்தவாசியில் உள்ள அலுவலகத்தில் முரளி, பணியில் சேர்ந்த நிலையில் 3 மாதத்திலேயே திண்டிவனத்தில் சுரேசின் வீட்டில் இயங்கிய அலுவலகத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டு வேலை செய்து வந்ததாகவும், அதற்கு தினக்கூலி அடிப்படையில் ரூ.16 ஆயிரம் வீதம் 16 மாதத்திற்கு கொடுத்து வந்துள்ளார்.
மேலும் முரளியை போன்று செஞ்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மூலம் சுரேசிடம் அரசு பணி ஆணை வார்த்தையை நம்பி ஜெயபால், மணிகண்டன், மணிமாறன், பாரதி, ராதா ஆகியோர் தலா ரூ.6 லட்சத்து 50 ஆயிரமும், இவர்கள் உள்பட மேலும் சிலர் என மொத்தம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தை பிரசாந்த் உத்தமன், அவரது மைத்துனர் சங்கர் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். பணத்தை பெற்ற அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
2 பேர் கைது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன், சுரேஷ், சீனிவாசன், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று சுரேஷ், சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்த் உத்தமன், சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.