ரூ.6.98 லட்சம் மோசடி; 2 ஊழியர்கள் கைது


ரூ.6.98 லட்சம் மோசடி; 2 ஊழியர்கள் கைது
x

ஊட்டியில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து விட்டு நிதி நிறுவனத்துக்கு பணத்தை செலுத்தாமல் ரூ.6.98 லட்சம் மோசடி செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து விட்டு நிதி நிறுவனத்துக்கு பணத்தை செலுத்தாமல் ரூ.6.98 லட்சம் மோசடி செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவனம்

கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் முகிலன். இவர் கோவையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் கிளை ஊட்டி கமர்சியல் சாலையில் இயங்கி வந்தது. இதில் ஊட்டி நொண்டிமேட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 25), ரகுநாத் (25) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து, தலைமை நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல், பணம் செலுத்தியது போல் போலியான ரசீதை தயார் செய்து முகிலனுக்கு அனுப்பி உள்ளனர்.

2 பேர் கைது

தற்போது நிறு நிறவனத்தில் கணக்குகளை சரிபார்த்த போது, சுரேஷ், ரகுநாத் ஆகியோர் பணம் செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து முகிலன் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணி குமார் உத்தரவின் பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இதுவரை ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 144 மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் போலியான ரசீது தயார் செய்து, மோசடியில் ஈடுபட்ட சுரேஷ், ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் சிறையில் அடைத்தனர்.


Next Story