குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறிவாலிபரிடம் நூதன முறையில் ரூ.4¾ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.4¾ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா பனிச்சமேடுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் வசந்த் (வயது 24). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், பகுதிநேர வேலை விஷயமாக அனுப்பும் வீடியோவை லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்றார்.
இதை நம்பிய வசந்த், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.120-ஐ பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் தொடர்புகொண்ட நபர், வசந்திடம் பகுதிநேர வேலையாக சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பினார். உடனே வசந்த், அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார்.
பின்னர் அந்த லிங்கினுள் சென்று ரூ.1,010-ஐ செலுத்தி ரூ.1,313 ஆகவும், ரூ.3,030-ஐ செலுத்தி ரூ.3,939 ஆகவும் திரும்பப் பெற்றுள்ளார். அதன் பிறகு வசந்த், தான் கணக்கு வைத்திருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்தும், தனது உறவினரின் வங்கி கணக்கில் இருந்தும் கூகுள்பே மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரத்து 128-ஐ 28 தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், வசந்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து வசந்த், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.