233 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
233 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கதிர் ஆனந்த் எம்.பி. வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு 233 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
அப்போது கதிர் ஆனந்த் எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது பொறுப்பேற்று இருக்கக்கூடிய தி.மு.க. அரசாங்கம் கல்வித் துறை சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாணவர்கள் சமூகத்தின் தூண்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் நன்றாக படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், ஆலங்காயம் பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.