அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
x

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஐ.ஆஜம், எம்.முனியப்பன், சாந்தி, ஐசக் ஆகியோர் வரவேற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் சி.எஸ். பெரியார் தாசன், ஆர்.மகேந்திரன், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் 45 அரசு பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இந்த கல்வியாண்டில் மேசை, பெஞ்ச் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், கட்டிடங்கள் போன்றவை செய்து தரப்படும் என்றார்.

இதனை அடுத்து அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து 3 அரசு பள்ளிகளுக்கு தலா 50 மேசை, பெஞ்ச் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story