மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்


மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்
x

கரூரில் 490 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று வழங்கினார்.

கரூர்

விலையில்லா சைக்கிள்கள்

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:- கடந்த ஆண்டு நமது பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை விட அடுத்த ஆண்டு அதிகமான தேர்ச்சி பெற்றோம் என்ற நிலையை மாணவர்கள் உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் சிறப்போடு வழிநடத்தி கொண்டிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்து மாணவர்களுக்கான கல்வி நலனில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி ஒரு அற்புதமான திட்டம், நாட்டுக்கு வழிகாட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டம். ரூ.36 ஆயிரத்து 895 கோடி பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பணைகள்

கரூர் மாவட்டம், இந்த 2 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை பெற்று இருக்கிறது. கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கரூருக்கு ஒரு அரசு வேளாண்மை கல்லூரி அறிவித்து, தற்போது வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அரவக்குறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என இதுபோன்ற தொடர்ச்சியான திட்டங்களோடு சேர்த்து தடுப்பணைகள், கதவணைகள் இன்னும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழங்கி கொண்டிருக்கிறார், என்றார்.

8,477 மாணவர்களுக்கு...

கரூர் மாவட்டத்தில் உள்ள 67 அரசு, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 4,019 மாணவர்கள், 4,458 மாணவிகள் என மொத்தம் 8,477 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. நேற்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 213 மாணவர்களுக்கும், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 131 மாணவர்களுக்கும், பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 146 மாணவிகளுக்கும் என மொத்தம் 490 மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 32 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.


Next Story