மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மயிலாடுதுறையில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறையில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா ைசக்கிளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முதன்முறையாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.
ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறைக்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கல்வித்துறைக்கு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 52 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 667 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 40 லட்சத்து 8 ஆயிரத்து 644 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள் வழங்க நடப்பு கல்வி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், நகராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவி காமாட்சி மூர்த்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.