சேலம் மாவட்டத்தில் ரூ.15.94 கோடியில் 31 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்


சேலம் மாவட்டத்தில் ரூ.15.94 கோடியில் 31 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, ரூ.15.94 கோடியில் 31 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சேலம்

சிறப்பு திட்டங்கள்

சேலம் 4 ரோட்டில் உள்ள சிறுமலர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நடப்பு நிதியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 895 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஒரே நேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கென ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

விலையில்லா சைக்கிள்

தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளை தரம் உயர்த்தி அதற்கான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி பள்ளிக்கு சென்று வரும் வகையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னையில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படித்த 15,465 மாணவர்களுக்கும், 15,892 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 31 ஆயிரத்து 357 மாணவ-மாணவிகளுக்கு ரூ.15.94 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடக்கமாக தற்போது 1,529 மாணவ, மாணவிகளுக்கு ரூ.77 லட்சத்து 70 ஆயிரத்து 933 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2,350 மாணவ, மாணவிகளுக்கு ரூ.41 லட்சத்து 81 ஆயிரத்து 697 மதிப்பில், விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ், மல்லூர் பேரூராட்சி தலைவர் லதா அய்யனார், துணைத்தலைவர் வேங்கை அய்யனார், நகர தி.மு.க. செயலாளர் சுரேந்திரன் (மல்லூர்), ரவிக்குமார் (பனமரத்துப்பட்டி), தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருளானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story