விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குவதாக கலெக்டா் தொிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது 18 வயது முதல் 27 வயது வரை உள்ள பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு விதமான 7,500 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். இவற்றிற்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 3.5.2023.
எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நாளை (புதன்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணிக்கு இப்போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், தேர்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தேர்விற்குரிய இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும், இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள், 25.4.2023க்குள்(நாளை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்புகள் குறித்து கூடுதல் விவரம் தெரிந்துகொள்ள 9499055906 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆகவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.