குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி
குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி திருவாரூரில் நடக்கிறது
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு மூலம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையர் (வணிக வரித்துறை), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர்(ஊரக வளர்ச்சித்துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது இணைக்கல்வித்தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் அனுப்புவதற்கு இன்று (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.