போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு


போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

7,500 பணியிடங்கள்

மத்திய அரசில் உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர் வருமான வரி ஆய்வாளர் உள்ளிட்ட 7,500 காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு குறைந்தபட்ச கல்வித்தகுதி ஆகும்.

1.8.2023 தேதியில் 18 முதல் 27 வரை வயது வரம்பாகும். இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு 5 ஆண்டுகள் வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 3-ந் தேதி கடைசிநாளாகும்.

இலவச பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்செறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்கண்ட பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 28-ந் தேதி முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டித் தேர்வுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் இணையதளத்தில் பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story