சின்னமனூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
சின்னமனூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
விழாவில் கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், "தேனி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரத்து 144 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. அதற்கான தொடக்க விழா தற்போது நடந்துள்ளது. மற்ற பள்ளிகளிலும் விரைவில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும்" என்றார்.
இந்த விழாவில், சின்னமனூர் ஒன்றியக்குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, சின்னமனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.