விவசாயிகளுக்கு 24 வகை மரக்கன்று இலவசமாக வினியோகம்
திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 24 வகையான மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், கன்று ஒன்றுக்கு பராமரிப்பு மானியமாக ரூ.7 வழங்கப்பட உள்ளதாகவும் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 24 வகையான மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், கன்று ஒன்றுக்கு பராமரிப்பு மானியமாக ரூ.7 வழங்கப்பட உள்ளதாகவும் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரக்கன்றுகள் இலவசம்
திருச்செந்தூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் தேக்கு, செம்மரம், சந்தனமரம், பெருநெல்லி போன்ற 24 வகையான பயன்தரும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் வயல் அல்லது தோட்டங்களில் வரப்பு ஓரமாகவோ, வயல் முழுவதுமாகவோ நடவு செய்யலாம்.
வயல் அல்லது தோட்டங்களில் வரப்புகள் ஓரமாக நடவு செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தோட்டம் முழுவதும் நடவு செய்ய 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் வழங்கப்படும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வரும் விவசாயிகளுக்கு 2-ம்ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு மரக்கன்றுக்கு ரூ.7 பராமரிப்பு மானியமாக வழங்கப்படும்.
முன்னுரிமை கிராமங்கள்
இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம் மற்றும் பிச்சிவிளை கிராம ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
முன்பதிவு அவசியம்
இத்திட்டத்தில் குறைந்த அளவு இலக்குகள் மட்டுமே உள்ளதால் முன்னுரிமை அடிப்படையிலேயே மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே முன்பதிவு செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ, உழவன் செயலி மூலமாகவோ அல்லது உங்கள் ஊர்வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.