அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி
பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளியில் கண்குறைபாடு உள்ள மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் பள்ளி சிறார்களின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் தலைவர் சீ.காவேரி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், எஸ்.ஆர்.சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி வரவேற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, கண்குறைபாடு கண்டறியப்பட்ட 126 மாணவிகளுக்கு கண்கண்ணாடிகளை வழங்கி பேசினர். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.சீனித்துரை, யூனியன் துணைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.