பக்தர்களுக்கு இலவசமாக காப்பு வழங்க வேண்டும்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு இலவசமாக காப்பு வழங்க வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு
குலசேகரன்பட்டினம்:
தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தண்டுபத்தில் தி.மு.க. உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி காலை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் விரதம் மேற்கொண்டு வேடம் அணியும் பக்தர்கள் திருக்காப்பு அணிவர். திருக்காப்பு முழுவதும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டாலும் திருக்காப்பு ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரளும் இத்திருவிழாவில் கட்டணமின்றி பக்தர்களுக்கு காப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று காலத்தில் இருவருடங்களாக திருக்காப்பு கட்டணமின்றி வழங்கப்பட்டது. கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை, சலுகைகளை செய்து வரும் அரசு குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் போது இலவசமாக திருக்காப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடன்குடி ஒன்றிய கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அஸ்ஸாப், ஒன்றிய பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி மணப்பாடு ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.