கிராமிய கலைஞர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிராமிய கலைஞர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
கிராமிய கலைஞர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சீவலப்பேரி அருகே பாலாமடை இந்திரா நகரைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், ரேஷன் கார்டுகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக...
அப்போது அவர்கள் கூறுகையில், ''எங்கள் பகுதியில் பால்பண்ணை கட்டிடத்தை இடிப்பது குறித்து அதே ஊரைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த சிலர், 25 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இவர்கள் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கவும், அங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஓராண்டாகிய நிலையில் இதுதொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து எங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்துள்ளோம்'' என்றனர்.
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அவர்கள் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கிராமிய கலைஞர்கள்
இதேபோன்று கிராமிய கலைஞர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ''நெல்லை, பாளையங்கோட்டை தாலுகாக்களில் சுமார் 2 ஆயிரம் பேர் கிராமிய கலையில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவே அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
மதவக்குறிச்சி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், ''மானூர் யூனியன் மதவகுறிச்சியில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கு பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அரசு கல்லூரி கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்லூரி கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது'' என்று கூறியுள்ளனர்.