திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் வேலவன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விளக்கப்படங்கள் மூலம் உடல்நலக் கல்வி வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் தண்டாயுதபாணி, கோமதி நைனார் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில், 160-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், கல்லூரி செயலாளர் நாராயணராஜன், முதல்வர் கலைக்குருசெல்வி, பேராசிரியைகள் மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமினை கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதல்படி கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி, உதவி ஆசிரியை வனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.